இரண்டாம் பத்து ஆறாம் திருவாய்மொழி
1. வைகுந்தா மணிவண்ணனே என்பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி
வைகும்வைகல்தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து
அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே
2. சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின்
மிக்கஞானச் சுடர்விளக்காய் துளக்கற்று அமுதமாய் எங்கும்
பக்கம் நோக்கறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
3. தாமரைக்கண்ணனை விண்ணோர்பரவும் தலைமகனை துழாய்விரைப்
பூமருவுகண்ணி எம்பிரானைப் பொன்மலையை
நாமருவி நன்கேத்தி உள்ளிவணங்கி நாம்மகிழ்ந்தாட நாவலர்
பாமருவி நிற்கத்தந்த பான்மையே வள்ளலே
4. வள்ளலே மதுசூதனா என்மரகத மலையே உனைநினைந்து
எள்கல்தந்த எந்தாய் உன்னை எங்கணம் விடுவேன்
வெள்ளமே புரைநின்புகழ் குடைந்தாடிப்பாடி களித்து உகந்துகந்து
உள்ளநோய்கள் எல்லாம் துறந்து உய்ந்து போந்திருந்தே
5. உய்ந்துபோந்து எனது உலப்பிலாத வெந்தீவினைகளை நாசம்செய்து உனது
அந்தமிலடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்துபைந்தலை ஆடரவணைமேவிப் பாற்கடல் யோகனித்திரை
சிந்தைசெய்த எந்தாய் உன்னைச் சிந்தை செய்துசெய்தே
6. உன்னைச் சிந்தைசெய்துசெய்து உன்நெடுமாமொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீவினைகள் முழுவேரறிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல்மார்வம் கீண்ட என்முன்னைக் கோளறியே முடியாததென் எனக்கே
7. முடியாததென் எனக்கேலினி முழுவேழுலகும் உண்டான் உகந்துவந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார்நோய்களெல்லாம் துறந்து எமர் கீழ்மேலெழுபிறப்பும்
விடியாவெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே
8. மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து அடியைஅடைந்து உள்ளம்தேறி
ஈறிலின்பத் திருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி அசுரர்தம் பல்குழாங்கள் நீறெழ பாய்பறவை ஒன்று
ஏறீவீற்றிருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்
9. எந்தாய் தண்திருவேங்கடம் நின்றாய் இலங்கைசெற்றாய் மராமரம்
பைந்தாளேருருவ ஒரு வாளிகோத்த வில்லா
கொந்தார் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா வானேரே இனியெங்குப் போகின்றதே
10. போகின்ற காலங்கள் போயகாலங்கள் போகுகாலங்கள் தாய்தந்தை உயிர்
ஆகின்றாய் உன்னை நானடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல்புகழ் மூவுலகுக்கும் நாதனேபரமா தண்வேங்கடம்
மேகின்றாய் தண்துழாய் விரைநாறு கண்ணியனே
11. கண்ணித் தண்ணந்துழாய்முடிக் கமலத் தடம்பெருங்கண்ணனை
புகழ்நண்ணித் தென்குருகூர் சடகோபன் மாறன்சொன்ன
எண்ணில் சோர்விலந்தாதி ஆயிரத்துள் இவையுமோர் பத்திசையொடும்
பண்ணில்பாட வல்லாரவர் கேசவன் தமரே
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக